தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்!

webteam

பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து கோவளத்தில் இருந்து புறப்பட்டார், சீன அதிபர் ஜின்பிங்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்றது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்று பேசினார். 

இரு நாட்டுத் தலைவர்களும் வெண்ணெய் உருண்டை கல் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடந்த கலாசார நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கண்டு ரசித்தனர்.

இதையடுத்து சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இருவரும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து சீன அதிபரை சென்னைக்கு பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.

இன்று காலை, கோவளத்தில் உள்ள ‘ஃபிஸர்மேன்’ஸ் கோவ்’ ஓட்டலில் சீன அதிபரும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்திய தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கலந்து கொண்டனர். பின்னர் சீன அதிபர் ஜின்பிங் உருவம் பதித்த பட்டு சால்வையை பிரதமர் மோடி அவருக்கு பரிசளித்தார்.

பின்னர், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் கிளம்பினார். அவரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார், பிரதமர் மோடி. சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் அங்கிருந்து நேபாளத்துக்குச் செல்கிறார். 

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்,சபாநாகர் தனபால் மற்றும அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.