தமிழ்நாடு

பெண் குழந்தை பிறந்தால் உடனே விற்பனை - கொல்லிமலை அவலம்..!

rajakannan

கொல்லிமலை மலைப்பகுதியில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் புதிய தலைமுறையின் களஆய்வில் தெரியவந்துள்ளன. 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக , கொல்லிமலை மலைப்பகுதியில் புதிய தலைமுறை களஆய்வில் ஈடுபட்டது. கொல்லிமலை மலைப்பகுதியில் உள்ள செங்கரை, பவர்காடு, ஆரியூர், ஊர்புறம், செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய தலைமுறை களஆய்வு மேற்கொண்டது. பணத்திற்காக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களே இந்தத் தகவலைக் கூறியுள்ளனர். 

பெண் குழந்தைகள் பிறந்தால், பெரும்பாலும் விற்பனை செய்து விடுவதாக ஆய்வில் தெரியவந்தது. ஆண் குழந்தைகள் என்றால் தொகை அதிகம் என்றும், அழகான தோற்றம் என்றால் மிக அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனிடையே குழந்தைகள் விற்பனை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் கொல்லிமலை பகுதியில் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அமுதா, முருகேசன் ஆகியோர் அளித்த முதற்கட்ட தகவலின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமுதா, முருகேசன், அருள்சாமி ஆகியோரை விசாரிப்பதற்காக அவர்களை சிபிசிஐடி 2 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.

இதனிடையே, ஈரோட்டில் குழந்தை தத்தெத்து கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த சுந்தர் என்பவர் ஈரோடு வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மதுரையைச் சேர்ந்த தனது உறவுக்கார தம்பதியருக்கு ஈரோட்டில் உள்ள இடைத்தரகர்களான கணேஷ்-ரேவதி தம்பதி மூலமாக கடந்த ஆண்டில் பெண் குழந்தை ஒன்றை நான்கரை லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் குழந்தையை தாயாரிடம் காட்ட வேண்டும் எனக்கூறி ஈரோட்டில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து இடைத்தரகர்கள் குழந்தையை பெற்றுச்சென்றதாக தெரிவித்துள்ளார். 

அதன்பின்னர் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பெற்ற நிலையில் தனியார் விடுதியில் தங்கிய வகையில் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதன்பின்னர் இடைத்தரகர்கள் குழந்தையை திரும்ப ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். 

இதனால் குழந்தை, பணத்தை திருப்பி கேட்டால் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் தெரியும் என்று கூறி இடைத்தரகர்களாக செயல்பட்ட பாலகிருஷ்ணன் மற்றும் கணேஷ் அவரது மனைவி ரேவதி ஆகியோர் மிரட்டுவதாகவும் மனுவில் கூறியுள்ளார். குழந்தையை வழங்காததால் மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, குழந்தை தத்தெடுத்து கொடுப்பதாக கூறிய மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை தம்பதியரின் உறவினர் சுந்தர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.