நெல்லை மேலப்பாளையத்தில் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் கடைசிநேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில், அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கும், அவரது உறவினருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் மணப்பெண் இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்றும், அதை மறைத்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் திருமண மண்டபத்திற்கு சென்ற அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியாக நடத்தி கொள்வதாக இருவீட்டாரும் தெரிவித்ததைடுத்து கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது.