சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை பிரிந்ததால் மீட்கப்பட்ட குட்டி யானை ‘அம்மு’ இன்று அதிகாலை மீண்டும் வனத்திற்குள் விரட்டப்பட்டுள்ளது.
ஈரோடு வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானை கடந்த சில நாட்களுக்கு முன் விளைநிலங்களில் சுற்றி வந்தது. அதனை மீட்ட வனத்துறையினர், அடர் வனத்திற்குள் குட்டியானையை விட்டனர். ஆனால், குட்டியானை மீண்டும் விவசாய நிலத்திற்குள் புகுந்தது. மீண்டும் மீட்ட வனத்துறையினர் கராச்சிக்கொரை வன கால்நடை மையத்தில் வைத்து குட்டியானைக்கு பால் புகட்டி வந்தனர்.
அம்மு எனப் பெயரிடப்பட்ட அந்த யானைக்குட்டியை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும் என வனவிலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பண்ணாரி வனப்பகுதியில் குட்டியானை விடப்பட்டுள்ளது. பிறந்து 3 மாதங்களே ஆன அந்த யானைக்குட்டியால், தாயின் உதவியின்றி தானாக உணவு தேடி உண்ண முடியாது என்றும், பசியில் ஓரிரு நாளில் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
அதனால், குட்டியானையை மீட்டு வனத்துறையே பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பிறந்து 3 மாதங்களே ஆன அந்தப் பெண் குட்டியானையை வனத்திற்குள் விட்டதற்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.