தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு

தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு

webteam

பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அரசு பொதுமருத்துவமனையில்‌ உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த பைசல் அகமது பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரவியத் பிரசவத்திற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை ரவியத்தின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே பெண் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொண்டுள்ளார். 

அப்போது மருத்துவர்  அளித்த தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்து விட்டதாகவும், இறந்த தகவலை கூட உடனே தெரிவிக்காமல் மருத்துவர் அல்லாத வேறொரு ஊழியர் வெகு நேரம் கழித்தே தெரிவித்ததாக ரவியத்தின் உறவினர்கள் கூறினர். இந்த நிலையில் அவரது உறவினர்கள் பிரசவ வார்டு முன்பு கூடி தவறான சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை கண்ணாடி உடைந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.