தமிழ்நாடு

"காரணம் சொல்லாதீங்க... வேகமா வேலையை முடிங்க"- அதிகாரிகளை எச்சரித்த தலைமைச் செயலர்

webteam

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலர் இறையன்பு இன்று 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். "காரணம் சொல்ல வேண்டாம் விரைவாக பணியை முடியுங்கள்" என ராஜமன்னார் சாலையில் ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரிகளை எச்சரித்தார் அவர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார். கடந்த வாரம் தென் சென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் இந்த வாரம் மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இன்று அசோக்நகர், விருங்கம்பாக்கம், தி நகர், எழும்பூர், மணலி உள்ளிட்ட 14 இடங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொள்கிறார். முதல் பகுதியாக அசோக் நகர் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் சாலை சீரமைப்பு பணிகளையும் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.

அடையாறு நதி - கே.கே நகர் அண்ணா மெயின் ரோடு வரை 820 மீட்டருக்கு 15 கோடி மதிப்பீட்டில் வெள்ள நிரந்தர மீட்பு நிதியின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ராஜமன்னார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் போது தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

"காரணம் சொல்ல வேண்டாம் விரைவாக பணியை முடியுங்கள்" என அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிந்து கொண்டார். விரைவாக பணியை முடித்து விட வேண்டும் என அதிகாரிகளிடம் தலைமைச் செயலர் உத்தரவிட்டார். தலைமைச் செயலர் இறையன்புவின் ஆய்வால் நெடுஞ்சாலை துறை, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் இருந்தனர்.