தமிழ்நாடு

மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று: முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை

webteam

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினமான இன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதில் முக்கிய பங்கு மகாத்மா காந்திக்கு உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது நினைவு தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது. மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினமான இன்று அவரது சிலைக்கும், படத்திற்கும் நாடு முழுவதும் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். அவரை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செய்தனர்.