திருச்சியில் முதல்வர் ஆய்வு எக்ஸ் தளம்
தமிழ்நாடு

திருச்சி | மணிமண்டபங்களில் திடீர் ஆய்வு.. அதிருப்தி அடைந்த முதல்வர்!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபங்களையும், நூலகத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

PT WEB

செய்தியாளர்: லெனின்.சு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே ஒரு கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீடு செலவில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்களையும், அதே வளாகத்தில் ஒரு நூலகத்தையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி திறந்துவைத்தார்.

முதல்வர் ஆய்வு

இந்த நிலையில் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான, மு.க.ஸ்டாலின் மணப்பாறையில் சிப்காட் வளாகத்தில் நடந்துவரும் பாரத சாரண சாரணியர் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இன்று திருச்சிக்கு சென்றார்.

இதற்கு திருச்சி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திடீரென இந்த மணிமண்டபங்களையும், நூலகத்தையும் ஆய்வு செய்தார். அங்கு காவலர்கள், நூலகர்கள், நூல்கள் என எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முதலமைச்சர் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், அந்த வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.