பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம் file
தமிழ்நாடு

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்”-பில்கீஸ் பானு வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்!

Kaleel Rahman

குஜராத்தில், கடந்த 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது, வன்முறையாளர்கள் சிலரால் பில்கிஸ் பானு என்ற 21 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்நேரத்தில் அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பில்கீஸ் பானுவின் 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

Bilkis banu case

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களுடைய விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், அவர்களது விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேலும் பலரும் இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக தீர்ப்பளித்தது.

court order

அதில், “தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள். இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க, விசாரணை மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட இடமான மகாராஷ்ட்ராவே பொருத்தமான இடம், குஜராத் அல்ல.

இத்தகைய தீர்ப்பின் மூலம் குஜராத் அரசு, மகாராஷ்ட்ரா அரசின் அதிகாரத்தை பறித்துள்ளது” என்று தெரிவித்தது. முன்விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டுமென நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

cm stalin

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.