2025 ஆகஸ்டு 15-ம் தேதியான இன்று நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். இதையொட்டி அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னை முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. மாநிலத்தின் முக்கிய பகுதிகள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கொந்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை.
தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கலைஞர். அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என தலைவர்கள் கனவு கண்டனர்” என்று பேசினார்.
மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 1967-ல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தியாகிகளை தொடர்ந்து போற்றிவரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. பெரும்பாலான தியாகிகளுக்கு மனிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்” என்று கூறினார்.
தொடர்ந்து தியாகிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், ”விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22ஆயிரமாக உயர்வு
தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11ஆயிரமாக உயர்வு
2ஆம் உலகப்போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.15ஆயிரமாக உயர்வு
2ஆம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர நிதி ரூ.8,000ஆக உயர்வு
முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும்
முன்னாள் படை வீரர்கள் தங்கும் விடுதி 33ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்” என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.
மேலும், ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.