vs babu - mk stalin web
தமிழ்நாடு

தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி.. முன்னாள் திமுக MLA-க்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தோல்வி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் திமுக MLA ஒருவரே வீழ்த்தியுள்ளது இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் அதிர்ச்சியாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். தபால் வாக்குகளில் முன்னிலை பெற்ற அவர், பின்னர் பெட்டி வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் பின்தங்கினார். முன்னாள் திமுக எம்.எல்.ஏவும், ஸ்டாலினின் முன்னாள் நெருங்கிய துணைவனுமான பாபு, இம்முறை அவரையே வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், காலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வாக்கு பெட்டியில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.

முக ஸ்டாலின்

படிப்படியாக தவெக முன்னிலை பெற்ற நிலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களை அக்கட்சி முன்னிலையில் உள்ளது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினும் தபால் வாக்குகளை எண்ணியபோது மட்டுமே முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பின்னர் பின்தங்கினார்.

தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் ஸ்டாலின் பின்னிலையில் இருந்த நிலையில், இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவியுள்ளார்.

முன்னாள் திமுக MLA-க்கு எதிராக ஸ்டாலின் தோல்வி..

திமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு 2006-ம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.வாக இருந்தார்.

2011-ல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த வி.எஸ்.பாபு பின்னர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு முக்கியத்தும் அளிக்கப்படாத நிலையில், அதிலிருந்து விலகி தவெகவில் சேர்ந்து தற்போது முதலமைச்சர் ஸ்டாலினையே தோற்கடித்து பெரும் சாதனை படைத்துள்ளார். இதுவரை 10 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள ஸ்டாலினுக்கு இது 3-வது தோல்வியாக அமைந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உருவான நிலையில், தொடர்ந்து 3 முறை அந்த தொகுதியில் வென்றுள்ள ஸ்டாலின், தற்போது முதல்முறையாக அந்த தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

இதற்கு முன்னர் 1991-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 1996 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் தோல்வியை தழுவியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஜெயலலிதாவுக்கு பின்னர் முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் தோல்வியை தழுவியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.