முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2010 ஆம் ஆண்டு - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது - கோவை மாநகரில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், 22.11.2021 அன்று கோவைக்கு வந்தார். அப்போது வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அவர் காந்திபுரத்தில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 18.12.2023 அன்று கோவைக்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இன்று செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த செம்மொழி பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம், பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம் உள்ளிட்ட 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்கும மரம் உள்ளிட்டவைகள் உள்ளன.
குறிப்பாக, செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. ரோஜா தோட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடையெழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் சேகரிப்பு வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், 4,000 சதுர அடி பரப்பளவில் வன மாதிரி காட்சியமைப்பு, குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் விளையாட்டுத் திடல், சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை, மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.