முதியோர், கைம்பெண் உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவுவைப்பு web
தமிழ்நாடு

முதியோர், கைம்பெண்களுக்கு கூடுதலாக ரூ.2000 வரவுவைப்பு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அரசு உதவித்தொகை பெற்றுவரும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 2000 ரூபாய் வரவுவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Rishan Vengai

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ரூ.2000 வழங்குவதாக அறிவித்துள்ளார். இது, சிறப்பு மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை தொடர்ந்து, சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து கட்சிகளில் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.

மகளிர் உரிமைத் தொகை

அந்த வகையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை பெற்றுவருபவர்களுக்கு மொத்தமாக 5000 ரூபாய் வரவுவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவுவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதியோர், கைம்பெண் உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவுவைப்பு

இந்தசூழலில் தற்போது புதிய அறிவிப்பாக அரசு உதவித்தொகை பெற்றுவரும் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 2000 ரூபாய் வரவுவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதியோர், கைம்பெண் உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவுவைப்பு!

தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் அறிவிப்பில், “விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!

இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,

5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,

பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி,

மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!" என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையுடன் மொத்தம் ரூ.5000 வழங்கப்பட்டது மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், முதல்வரின் சிறப்பு நிதி அறிவிப்பும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.