சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “எனது துறையில் உள்ள சிக்கல்களை பேரவையில் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப்போல் அல்லாமல் தொழிற் பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே என் துறையில் செயல்படுகிறது. டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழில் துறை வசமே உள்ள அசாதாரண நிலை 20 ஆண்டுகளாகத் தொடர்கிறது. எனவே, யாரிடம் நிதி, திறன் மற்றும் அதிகாரம் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் செய்துகொடுப்பார் என்று கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை" என ஆதங்கத்துடன் சொன்னார். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, “துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள்” என்றார்.
இந்த நிலையில், திராவிட அறநெறியாளர் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்களின் வாழ்வே வரலாறு என்ற பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ”பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வாதங்களை வைக்க கூடிய நபர். இந்தச் சொல்லாற்றால் அவருக்கு பலமானதாக மட்டுமே இருக்க வேண்டும், பலவீனமாக மாறிவிடக் கூடாது. இதை, ஏன் சொல்கிறேன் என அவருக்குத் தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயை மெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் அவதூறுகளுக்கு உங்கள் சொல்லால் அது அவலாக மாறிவிடக் கூடாது என்பதை தலைவராக மட்டும் இல்லாமல் உங்கள் மீது அக்கறை உள்ள நபராகச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
என் சொல்லைத் தட்டாத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் நிச்சயம் புரிந்துக் கொள்வார் என நம்புகிறேன். ” என்றார்.
தொடர்ந்து பி.டி.ராஜன் குறித்து முதல்வர் பேசுகையில், “பி.டி.ராஜன் அவர்கள் வரலாறாக வாழ்ந்தவர், அவரின் ஆட்சியில்தான் கூட்டுறவு, பொதுப்பணித் துறை உருவாக்கியவர். வாழும்போது வரலாறாக வாழ்ந்தவர் பி.டி.ராஜன் அவர்கள். இந்தி எதிர்ப்பாளர் கிடையாது. ’இந்தி திணிப்புக்கு எதிரானவர்’ என்று அன்றே சொன்னார். இன்றும் நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்
வெற்றியோ தோல்வியோ எதுவாகினும் நிற்கும் நிலை மாறாது. அதுதான் திமுக. திராவிட நெறியாளர் பி.டி.ராஜன் குறித்த நூலை வெளியிடுவது என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன். 1937 தேர்தலில் நீதிக் கட்சி தோற்கடிக்கப்பட்ட நேரத்தில், ’என்றாவது ஒருநாள் இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம்’ என பி.டி.ராஜன் சொன்னார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ’பழி வாங்கப்பட்டது’ எனச் சொன்னார். திமுக வெற்றியை நீதிக் கட்சி வெற்றியாக நினைத்தார். திமுகவின் செயல்பாட்டைப் பார்த்த அவர், 1971ஆம் ஆண்டு திமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியவர் பி.டி.ராஜன்.
1967ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் நீதிக் கட்சி சார்பில் அமைச்சர்களுக்கு பி.டி.ராஜன் விருந்து வைத்தார். அப்போது பேசிய அண்ணா, ’பி.டி.ராஜன் போன்ற பெரும் தலைவர்கள் ஆலோசனையில் என்னுடைய ஆட்சி நடைபெறும்’ என தெரிவித்தார். பி.டி.ராஜன் வழித்தடத்தில்தான் இன்றும் நாம் பயணம் செய்து வருகிறோம். ’விழா அழைப்பிதழில் நீதிக்கட்சியின் இறுதி தலைவர்’ எனப் போடப்பட்டுள்ளது. நீதிக் கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. நீதிக் கட்சியின் நீட்சியே இந்த ஆட்சி. இதை, நான் சட்டமன்றத்தில் கூறி உள்ளேன். திமுக ஆட்சி என்பது நீதிக் கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான். வாரிசு என்ற சொல்லையே கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அதற்காகவே நான் இதைத் திரும்பத்திரும்பச் சொல்கிறேன்” என்றார்.
இதற்குப் பின் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “சமூகநீதிக்கான போர்க்குரல், சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்திய அரசியலை நெறிப்படுத்தும் திசைகாட்டி, எனக்கு என்றும் வழிகாட்டி, எல்லாச் சூழ்நிலையிலும் என்மீது நம்பிக்கை வைத்து என்னைப் பாதுகாக்கும் பாசத்துக்குரிய தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் இருந்த நிலையில், பின்னர், அத்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.