காவிரி விவகாரத்துக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது குறித்து, இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று காலை கூடியவுடன், திமுகவின் துரைமுருகன் காவிரி பிரச்னையை எழுப்பினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டிய துரைமுருகன், தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பிரச்னைகளுக்கும் இன்றைய கூட்டத்தில் தீர்வு காணப்படும் எனவும், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியிருப்பதாகவும் கூறினார். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்த முதலமைச்சர், அதை நடைமுறைப்படுத்த இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என கூறினார்.
இந்த ஆணையத்தின் செயல்பாட்டை பார்த்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.