சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த பணியின்போது குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், நாணயம், மணிகள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் மாதிரியானவை அடையாளம் காணப்பட்டுள்ளன. பழந்தமிழரின் புகழை உலகறிய செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழலில் கீழடியில் நாளை காலை அகழ்வைப்பகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவார் என சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன்.
அதில் “மாண்புமிகு முதல்வர் தொல்லியல் ஆய்வுவாயிலாக, தமிழர் பெருமையினை பறைசாற்றிட, சிவகங்கை கீழடியில் 12.25 ரூபாயில் உருவாகும் உலகத்தரம் மிக்க அகழ்வைப்பகத்திற்கு நாளை காலை 10 மணிக்கு தன் பொற்கரத்தால் காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்” என தெரிவித்துள்ளார் அவர்.