மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி PT
தமிழ்நாடு

"கேள்வியில் என்ன தவறு இருக்கிறது; ராமதாஸிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்"-அன்புமணி ராமதாஸ்

தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராமதாஸிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Rabiya

அதானி உடனான சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், "ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை; தினம் எதாவது அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருப்பார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

ராமதாஸூக்கு வேறு வேலை இல்லை; தினம் எதாவது அறிக்கை வெளியிட்டுக்கொண்டு இருப்பார். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை
மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர்

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ். "பிரதமர் மோடியால் போற்றப்பட்டு இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் ஐயா ராமதாஸை மதிக்கிற இந்த சூழலில், ஒரு முதலமைச்சர் இவ்வளவு ஆணவத்துடன் பேசுவது பதவிக்கு அழகு கிடையாது. எங்கள் ஐயா கேள்வி கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. கெளதம் அதானியை உங்கள் இல்லத்தில் எதற்கு இரகசியமாக சந்தித்தீர்கள் என்று கேட்டார். அதில் என்ன தவறு உள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பது எங்களின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது உங்களின் கடமை. அதனைவிட்டுவிட்டு மருத்துவர் ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மருத்துவர் ஐயா இல்லையென்றால், கலைஞர் 2006ல் முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா தொடர்ந்து விமர்சனம் செய்த அந்த காலத்திலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களின் முழு ஆதரவை கொடுத்தோம். அதனால்தான் கலைஞர் 5 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தார். முக.ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கினார் . மருத்துவர் ஐயா இல்லையென்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது, மணிமண்டபம் வந்திருக்காது. நாங்கள் போட்ட வழக்கை திரும்பப் பெற்றதால்தான் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய நீதிபதி தீர்ப்பு கொடுத்தார்.

மருத்துவர் ஐயா இல்லையென்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது, மணிமண்டபம் வந்திருக்காது.
அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்
கருணாநிதி

ஒரு மூத்த அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதியை பார்த்து அவருக்கு "வேறு வேலை இல்லையென்று" சொல்வது எவ்வளவு ஆணவம். கலைஞரிடம் ஸ்டாலின் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்களே ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், "ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவாக முதல்வர் பதில் அளித்தது கண்டிக்கத்தக்கது. அதானி நிறுவனத்துடன் திமுக அரசு, குடும்பத்தாருக்கு தொடர்பு என்ற செய்தியை மறைக்க முயற்சி; அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு" என்று தெரிவித்துள்ளார்.