தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய `உங்களில் ஒருவன்’ சுயசரிதை - விரைவில் முதல் பாகம் வெளியீடு

நிவேதா ஜெகராஜா

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியை நேற்று தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன்பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலம் அரங்கை பார்வையிட்டார். பின்னர், ஐந்தாயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை ஆற்றங்கரை தொல்பொருள் காட்சி அரங்கை முதலமைச்சர் பார்வையிட்டார். பொருநை ஆற்றங்கரை பகுதிகளில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

விழாவில் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது’களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உரைநடைக்கான விருது எழுத்தாளர் சமஸ்-க்கும், நாடகத்துக்கான விருது பிரசன்னா ராமசாமிக்கும், கவிதைக்கான விருது ஆசைத்தம்பிக்கும், புதினத்துக்கான விருது வெண்ணிலாவுக்கும் வழங்கப்பட்டது. பிறமொழி பிரிவில் பால் சக்கரியாவுக்கும், ஆங்கிலப்பிரிவில் மீனா கந்தசாமிக்கும் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த பதிப்பாளர் விருது உட்பட பபாசி விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோல புத்தகக் காட்சி நடைபெற வேண்டுமென்பதே இந்த அரசின் விருப்பம். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்கிறோம். மேலும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நூலக மேம்பாட்டுக்கும் செயலாற்றி வருகிறோம். தமிழக வரலாற்றில் அறிவுக்கோயில்களை விரிவுப்படுத்த, திமுக அரசு அதிக ஆர்வம் காட்டியும் வருகிறது.

நூறாண்டு காலம் அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு, சுயமரியாதை சொல்லிக் கொடுத்து, புத்தகங்கள் அச்சிட்டு கொடுத்து அறிவுப்புரட்சி செய்த திராவிட இயக்கமே அறிவு இயக்கம்தான். நான் எழுதிய சுயசரிதை நூலின் முதல்பாகத்தை இந்த மாத இறுதியில் புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளேன். பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் காட்டிய புத்தக வழியிலான அறிவொளி பரப்பும் வழியில்தான் இந்த அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கும், தமிழுக்கும் இந்த ஆட்சியில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதும்கூட” என்றார்.

முதல்வர் பேசியவற்றின் முழு காணொளியை இங்கு காண்க:

பின்னர் புத்தகக் காட்சிக்காக பபாசிக்கு வழக்கமாக அளிக்கப்படும் நிதியுடன் கூடுதலாக 50 லட்சம் சேர்த்து, மொத்தம் 1.25 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். மார்ச் 6-ஆம்தேதி வரை நடைபெற உள்ள சென்னை புத்தகக் காட்சியில் 800 அரங்குகளில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாடநூல் கழகம் சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.