தமிழ்நாடு

``தமிழக அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா”- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிவேதா ஜெகராஜா

அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அரசு சார்பில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சி, சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.

  • 2022 -ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது: மு.மீனாட்சிசுந்தரம்
  • 2021 -ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது: நாஞ்சில் சம்பத்
  • பெருந்தலைவர் காமராசர் விருது: முனைவர் குமரி அனந்தன்
  • மகாகவி பாரதியார் விருது: பாரதி கிருஷ்ணகுமார்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது: புலவர் செந்தலை கவுதமன்
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: முனைவர் ம.இராசேந்திரன்
  • கம்பர் விருது: பாரதி பாஸ்கர்
  • சொல்லின் செல்வர் விருது: சூர்யா சேவியர்
  • ஜி.யு.போப் விருது: அ.சு.பன்னீர் செல்வன்
  • உமறுப்புலவர் விருது: நா.மம்மது
  • இளங்கோவடிகள் விருது: நெல்லை கண்ணன்
  • சிங்காரவேலர் விருது: கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
  • மறைமலையடிகளார் விருது: சுகி.சிவம்
  • அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: முனைவர் இரா.சஞ்சீவிராயர்
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது: ஞான.அலாய்சியஸ்
  • 2020-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது: முனைவர் வ.தனலட்சுமி
  • 2021-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது: க. திருநாவுக்கரசு
  • 2021-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது: நீதியரசர் சந்துரு
  • தேவநேயப்பாவாணர் விருது: முனைவர் கு.அரசேந்திரன்

ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொரோனா காலத்தால் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே ஜனவரி மாதம் தொடங்க இருந்த கண்காட்சி தள்ளிப்போனதால் அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் வரைக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். அதனை மனதில் கொண்டு ஐம்பது லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 1.25 கோடி ரூபாய் பதிப்பாளர்- விற்பனையாளர்களுக்கு கிடைத்திருக்கிறது. புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கும் போது ஒர் அறிவிப்பை வெளியிட நான் எண்ணியிருந்தேன். ஆனால், அது தேர்தல் காலமாக இருந்ததால் அன்று அதனைச் சொல்ல முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அதற்கும் இடம் தரவில்லை. அந்த அறிவிப்பு என்னவெனில், `அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கபடும்’. அதற்கான நிலத்தை அரசு வழங்கும்.

முத்தமிழறிஞர் கலைஞர், ஒருமுறை இந்த யோசனையை எனக்கு சொல்லி, அமைக்கப்படும் பூங்காவுக்கு புத்தகப் பூங்கா என்றும் அவர் பெயர் சூட்டியிருந்தார். அதையே இப்போது செயல்படுத்துகிறோம். இத்திட்டத்துக்காக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கான நிலத்தைத் தேர்வு செய்து, அரசு வழங்கும் என்று இந்நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம், அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களை ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகும். அதனை உருவாக்கித் தர, அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யும்” என்றார்.

மேலும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் தனது தமிழ்க் கடமையை செய்துவிட்டது போல் நினைப்பதாக தெரிவித்தார். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

- ரமேஷ்