தமிழ்நாடு

'ஏற்றுமதியில் 3வது இடத்தில் உள்ள தமிழகம் முதலிடம் வரவேண்டும்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

JustinDurai

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ள நிலையில், முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அரசின் இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது ஏற்றுமதி துறையில் சிறப்பாக செயலாற்றிய தொழிலதிபர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றுமதி அவசியம் எனத் தெரிவித்தார். புவிசார் குறியீடு பெற்ற 43 பொருட்கள் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய முடியும் எனக் கூறிய முதல்வர், ஒன்றிய அரசின் ஏற்றுமதி திட்டங்களை உற்பத்தியாளர்களுக்கு கொண்டு சேர்க்க கூட்டமைப்பு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது எனக் கூறிய முதல்வர், சர்வதேச வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்து 8.97 சதவிகித பங்களிப்புடன் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: மதுரை: அனுமதியின்றி பேனர்- பாஜகவினர் மீது வழக்கு