தமிழ்நாடு

கன்னியாகுமரி மழை: தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நிவேதா ஜெகராஜா
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை - வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேத விவரங்கள் முதல்வர் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண முகாம்கள், நிவாரண உதவிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் தேவைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும் மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள் பெரியகருப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.