முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி கோப்புப்படம்
தமிழ்நாடு

தென் மாவட்ட வெள்ள பாதிப்பு.. இன்று பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர்

webteam

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் நேரம் கேட்டிருந்தார். அதன்படி இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

rain

பிரதமர் உடனான சந்திப்பில் 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக எடுத்துரைக்க உள்ளார். மேலும் ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான வெள்ள நிவாரண நிதியாக 12 ஆயிரம் கோடி ரூபாயை உடனே ஒதுக்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக டெல்லியில் நடைபெறவுள்ள I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே டெல்லியில் இருந்தவாறு, வெள்ள பாதிப்புகள் குறித்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது 4மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.