தமிழ்நாடு

நவீன வசதியுடன் சேலத்தில் பஸ் போர்ட்: முதலமைச்சர் தகவல்!

webteam

விமான நிலையம் போல அனைத்து நவீன வசதிகளோடு சேலத்தில் பஸ் போர்ட் அமைக்க மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்திருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 21 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் பெங்களுரு சாலையின் ‌இரும்பாலை சந்திப்பில் புதிய மேம்பாலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். 

அப்போது பேசிய முதலமைச்சர், விமான நிலையம் போல அனைத்து நவீன வசதிகளோடு சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றும் இதற்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து நெரிசல் அற்ற மாநகராக சேலம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். 

சேலத்தில் 103 கோடி ரூபாயில் பல்வேறு திட்டப் பணிகளையும் முதல்வர் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியான தினத்தையொட்டி, மேட்டூர் அணை முன் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணை திறந்து வைக்கிறார்.