குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக ரூ 200 கோடியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள குடிநீர் விநியோகம் பற்றி விரிவான ஆய்வு நடத்த முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் அறிவுரை வழங்கினார்.
மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய ஆய்வுக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு, குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இத்தொகை மூலம் மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரகப்பகுதி குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ. 65 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.