தமிழ்நாடு

திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்ததுண்டா? - முதல்வர் பழனிசாமி கேள்வி

திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்ததுண்டா? - முதல்வர் பழனிசாமி கேள்வி

JustinDurai

திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்ததுண்டா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்ட அவர் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது கொல்லி மலைவாழ் மக்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது ஆன்லைன் கல்விக்கு ஏற்ற வகையில் தடையில்லா இணைய வசதிக்கு செல்போன் கோபுரம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் வாகனகத்தில் சென்று பரப்புரை செய்த அவர், கொரோனா காலத்தில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டதாக கூறினார். ஆனால் மக்களுக்கு எதுவும் வழங்கவில்லை என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பொய் பரப்புரை மேற்கொள்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பழைய பாளையம், அலங்காநத்தம் சாலைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

''கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்க உத்தரவிட்டிருக்கிறோம். மட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் ரூ.1000 வழங்கினோம். சென்ற பொங்கலுக்கும் பொங்கல் பரிசு வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சி செய்தபோது ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தது உண்டா? இல்லை’’ எனப் பேசினார்.