தமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்‘ நினைவில்லமாக திறப்பு

webteam

நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபாவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகள், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜெயலலிதா மறைவிற்கு பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தை அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தீபக்கின் வழக்கறிஞர் கூறினார்.

அதற்கு அரசு தரப்பில், கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு தற்போது
மனுதாரர்களின் வசம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும்
நினைவுகளை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படுவதாகவும், வணிக பயன்பாட்டுக்காக
கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதி, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக திறந்து வைக்க தடை விதிக்க மறுத்துவிட்டார். அதே சமயம் நிபந்தனைகளுடன் நினைவு இல்லத் திறப்பு விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கணக்கெடுக்க வேண்டியுள்ளதால், நினைவில்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி தற்போது ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவை ஒட்டி போயஸ் தோட்ட பகுதி முழுவதும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.