தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல பேரில், 10 குழந்தைகள், 16 பெண்கள், 13 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் 51 நபர்கள் சிகிச்சையில் உள்ள நிலையில், ஒருவரை தவிர மற்றவர்கள் பாதுக்காப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை செய்துவருகிறது.
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை நேராக சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் நிலை குறித்து விசாரணை மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்ந்து கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க, அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு... மத்திய உள் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் விசாரணை ஆணையம் அமைத்து அறிவிப்பு...
கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அரசியல் நோக்கத்துடன் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை... ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.