சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டு, நேரு பூங்கா வரையுள்ள மெட்ரோ சேவை சென்னை சென்ட்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சின்னமலை வரையுள்ள சேவை, சைதாப்பேட்டை வழியாக ஏஜி-டிஎம்எஸ் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சேவையை தொடங்கிவைத்து முதலமைச்சர், மத்திய இணையமைச்சர்கள் உள்ளிட்டோர் ரயிலில் சென்ட்ரல் வரை பயணித்தனர். சென்ட்ரல் வரை சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால் இனி விமான நிலையத்திலிருந்து நேரடியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதற்கு 70 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தார். 3 வழித்தடங்களில் செயல்படவுள்ள இந்தத் திட்டத்தில் தமிழக அரசு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.