கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் விடுவிப்பது தொடர்பாக பேச தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆந்திரா செல்ல உள்ளார்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது கிருஷ்ணா நதி நீர் திட்டமாகும். இதன்படி, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு போதிய நீர் திறப்பது தொடர்பாக ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வர் ஒருவர் கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பது தொடர்பாக பேச ஆந்திரா செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
இதற்கிடையில் கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொண்டதற்காக தமிழக தரப்பிலிருந்து தங்களுக்கு 400 கோடி ரூபாய் வர வேண்டியிருப்பதாக ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கிருஷ்ணா நீர் விடுவிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் கடந்த வாரம் ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.