தமிழ்நாடு

“ஜீவ சமாதி என்பது தற்கொலை குற்றத்திற்கு சமம்” - தமிழ்மணி மூத்த வழக்கறிஞர்

webteam

ஜீவ சமாதி என்பது தற்கொலை குற்றத்திற்கு சமம் என மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார். 

சிவகங்கையை சேர்ந்த இருளப்ப சுவாமி என்ற 80 வயது முதியவர் ஜீவ சமாதி அடையப்போவதாக அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிக்குள் அவர் ஜீவ சமாதி அடைய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் தன் கனவில் வந்து ஜீவ சமாதி அடைய சொன்னதாக அவர் தெரிவிக்கிறார். நாளை காலை 5 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்பதால் இதில் சட்டப்பிரச்னை இருக்காது என அந்த முதியவர் கூறுகிறார். இந்த முதியவரை காண ஏராளமான மக்கள் கூட்டம் அப்பகுதியில் கூடியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ஜீவ சமாதி என்பது சட்டத்தை பொறுத்தவரை தற்கொலை. இதில் குழப்பமே இல்லை. எந்த காரணங்கள் சொல்லி எந்த விதத்தில் இறப்பை தேடினாலும் குற்றமே. மத ரீதியாக இந்த முறையை அணுகுவதால் சட்டத்தில் இருந்து தப்பித்து விட முடியாது. இது சட்டத்திற்கு புறம்பானது.

இதை இவர் உண்மையாகவே செய்ய போகிறாரா? அல்லது விளம்பரம் தேடுகிறாரா? உண்மையான சாமியாரா? அல்லது போலியா? என்பது தெரியாது. நாமே கதவை திறந்து இதை அனுமதிக்கக்கூடாது. சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டிய விஷயம். தடுக்கப்பட வேண்டிய விஷயம்” எனத் தெரிவித்தார்.