தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பதவி விலக முடிவு?

rajakannan

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமாணி பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ பாலியல் (Bilkis Bano) வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். 

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதேபோல், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இந்நிலையில், நீதிபதி தஹில் ரமாணி பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வமான ராஜினாமா கடிதத்தை அவர் விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மிகவும் மூத்த நீதிபதிகளில் தஹில் ரமாணியும் ஒருவர். அத்துடன் தற்போது இந்தியாவில் பணியிலுள்ள இரண்டு பெண் தலைமை நீதிபதிகளில் இவரும் ஒருவர். மேகாலயா உயர்நீதிமன்றம் மிகவும் சிறிய உயர்நீதிமன்றம். இந்த உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாகும். இதில் தற்போது அங்கு 2 நீதிபதிகள் பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.