தமிழ்நாடு

''முதலில் வேதா நிலைய நிகழ்ச்சியை நடத்துங்கள்'' - தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

webteam

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதியில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதனிடையே வாரிசுகள் என அறிவித்த தீபா, மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதில், “ஜெயலலிதா இல்ல வளாகத்தை திறந்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம். ஆனால் இல்லத்திற்குள் செல்லக்கூடாது. பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிக்கக்கூடாது. சொத்துக்களை முறையாக கணக்கிடவில்லை” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட அனுமதியில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நேற்று இரவு இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மெமோ ஒன்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. அந்த மெமோவின் அடிப்படையில், இந்த மனுவை தலைமை நீதிபதி காணொளி மூலம் விசாரணை நடத்தினார்.

அப்போது நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறலாம். அதேசமயம் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதால் முதல்வர், துணை முதல்வர், வேதா நிலையத்திற்குள் செல்வார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.