தமிழ்நாடு

’’என்னை மறந்துவிட வேண்டாம்’’ - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி

webteam

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி இன்றுடன் பணி ஓய்வுபெற்றார். இப்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 55 ஆக குறைந்து, காலியிடங்கள் 20 ஆக குறைகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், செப்டம்பர் 12ஆம் தேதியான இன்றுடன் பணி ஓய்வுபெற்றார்.

கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவிவகித்த காலத்தில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கோவில் அர்ச்சர்கர்கள் ஆகம விதிப்படி தான் நியமிக்க வேண்டும், ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினியை விடுதலை செய்ய மறுத்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்தது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது, கோவில் சொத்துக்களை அரசு சொத்துக்களாக கருத முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வுபெறுவதை ஒட்டி, உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பிரிவு உபசார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், ’’குறுகிய காலத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்ற நேரத்தில் கூறியபடி நீதிபரிபாலனத்தை விரிவுபடுத்தியதாக கூறி, அவர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

பதவிக்காலத்தில் 7 வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்ததுடன், 116 நீதிமன்ற அறைகளுடன் 10 மாடி நீதிமன்ற கட்டிடத்துக்கும், பழைய சட்ட கல்லூரி புதுப்பிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் வழக்கறிஞர்களால் நினைவில் கொள்ளப்படும்’’ என்றார்.

ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்ற போது தமிழகத்தில் பிறக்க விரும்பியதாகவும், தற்போது அந்த ஆசை அதிகமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும், நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க அவர்கள் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியை தருவதாக கூறினார். நாட்டிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்களை கொண்ட உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமானது எனவும், திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சக நீதிபதிகள் ஒத்துழைப்பால் நீதி பரிபாலனம் மற்றும் நீதி நிர்வாகத்தில் இயல்பாக பணியாற்ற பேருதவி புரிந்தன என்றும் குறிப்பிட்டார்.

9 மாடி கட்டடம், 116 நீதிமன்ற அறைகளை கொண்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர் நீதிமன்றத்தின் 9 விசாரணை அறைகளை கொண்ட சட்டக்கல்லூரி புதுப்பிக்கும் பணி ஆகியவற்றின் துவக்க விழாக்கள் குறுகிய காலத்தில் கைகூடியது அவர்களின் போதிய ஒத்துழைப்பால் தான் என்றும் குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசும், முதல்வரும், சட்ட அமைச்சரும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத்துறை செயலாளர்களும் மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதாக பாராட்டு தெரிவித்தார். கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்வதாகவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

-முகேஷ்