செய்தியாளர்: சுரேஷ்குமார்
சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டனில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியபோது...
இறைவன் முன்பு அனைவரும் சமம்:
கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது நல்ல உத்தரவு மகிழ்ச்சியான உத்தரவு. எல்லோருக்கும் எல்லாம். இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்ற வார்த்தைக்கு உயிர் கிடைத்திருக்கிறது. பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல ஏற்கனவே காலங்காலமாக இருந்த வந்து நடைமுறை தான். இடையில் கொரோனாவின் போது கனக சபை தரிசனத்தை தடை செய்தார்கள். அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சிக்குப் பிறகு பக்தர்கள் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது.
உயர் நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது:
ஆனால், அதனை எதிர்த்து திருக்கோயில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். நீதிமன்றம் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை இல்லை எனவும், இந்து சமய அறநிலைத்துறை முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனக சபை மீது ஏறி தரிசனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தான் நீதியரசர்கள் இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை கருத்தை கேட்டிருக்கிறார்கள். மேலும் தரிசனத்திற்கு தடை விதிக்கவில்லை தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் எப்படி சென்று தரிசனம் செய்யலாம் என்பது குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
பெண் ஓதுவார்கள் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்:
இந்த சட்ட போராட்டம் இன்று நேற்று அல்ல, 2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய போராட்டம். இறைவனோடு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க கூடிய வகையில் உள்ளது. பெண் ஓதுவார்கள் 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஓதுவார் பயிற்சி பள்ளிகளை மேம்படுத்தி ஆண்டு ஒன்றுக்கு 80ல் இருந்து 100 ஓதுவார்கள் பயிற்சி பள்ளி மூலம் வருகிறார்கள். எங்கெல்லாம் ஓதுவார் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்ற பெருமக்களை காலி பணியிடங்களுக்கு நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் 100 பேருக்கு குறையாமல் ஓதுவார் பயிற்சி பள்ளியிலே சேர்வதற்கு உண்டான முயற்சிகளை இந்து சமய அறநிலைத்துறை, கூடுதல் ஆணையாரிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைவு படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.