தமிழ்நாடு

25 பைசா நாணயத்திற்கு ‘பிரியாணி’ - மக்கள் கூட்டத்தால் மிரண்டுபோன உரிமையாளர்

webteam

வேலூரி 25 பைசா நாணயம் கொண்டு வருவோருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் திரண்டனர்.

வேலூர் ஆரணி ரோடு சாலையில் புதியதாக இன்று தனியார் பிரியாணி கடை தொடங்கப்பட்டது. கடை விளம்பரத்திற்காக முதல் நாளான இன்று மட்டும், காலை 11 மணி முதல் 12 மணி வரை பழைய 25 பைசா நாணயத்தை கொண்டுவரும் நபருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலமாக பல பகுதிகளில் விளம்பரப்படுத்தி இருந்தனர். 

இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் பழைய 25 பைசா நாணயத்துடன் காலை 10 மணிக்கே கடை முன் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர். என்ன செய்வது என்று அறியாத கடையின் உரிமையாளர் 200 பேருக்கு மட்டும் 25 பைசா நாணயத்தை பெற்றுக்கொண்டு பிரியாணி வழங்கினார்.

கடையின் உரிமையாளர் கூறுகையில் பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் நினைவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை அறிவித்ததாக கூறினார். ஆனால் இத்தனை பேர் பழைய நாணயங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது தான் தெரியும் என தெரிவித்தார்.