தமிழ்நாடு

மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார்

மீண்டும் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் - அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார்

webteam

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் தமிழழகனை கையும் களவுமாக பிடித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலைய குற்ற பிரிவு ஆய்வாளராக பணியாற்றிவர் தமிழழகன். இவர் பிரபாகர் என்பவரிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. 

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் பிரபாகர் புகார் அளித்தார். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அண்ணாநகர் காவல்நிலையம் அருகே உள்ள கோயில் அருகே பிரபாகர், ஆய்வாளர் தமிழழகனை வரச்சொல்லி அவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

விசாரணையில் ஓய்வு பெற்ற ரெயில்வே போலீஸ் சுப்பிரமணியன் என்பவருக்கும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பிராபாகருக்கும் இடையில் இருந்த சொத்து பிரச்னையை சுமூகமாக பேசி முடித்து வைத்ததற்காக தமிழழகன் லஞ்சம் கேட்டிருப்பது தெரியவந்தது. 

ஏற்கெனவே லஞ்சம் வாங்கிய புகாரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தமிழழகன் மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.