சென்னை ஐஐடியில் செயல்படும் வனவாணி பள்ளியில் மாணவர்கள் மீது தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்...
வனவாணி பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஐஐடி நிர்வாகம் உள்ளிட்டவற்றுடன் சேர்ந்து மாணவர்களுக்கு தாங்கும் திறன் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், மாணவர்களை ஓட வைத்து சில கருவிகள் மூலம் அவர்களின் திறன்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் மாணவர்களின் வியர்வை மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர், பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “வணிக ரீதியாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் தாங்கும் திறனுக்கான சாத்தியக் கூறுகளை புரிந்துகொள்வதற்காக பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அதில் திட, திரவ மருந்துகள் மாணவர்களுக்கு தரப்படவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இது மருத்துவம் தொடர்பான சோதனை கிடையாது. ஊக்க மருந்தோ, மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் கொண்டோ சோதனை நடத்தப்படவில்லை. மாணவர்களின் காலணிகளில் பொருத்தக் கூடிய பட்டைகளை வைத்து நடக்கச் செய்து பரிசோதிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மருந்துகள் எதுவும் செலுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களில் பெற்றோர் அனுமதியின்றி சோதனைகள் மேற்கொள்ளப்படாது” என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், “மாணவர்களுக்கு உடல் ரீதியான சோதனை நடத்தப்பட்ட போதும், எந்த ஊசியும் செலுத்தப்படவில்லை” என தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் மோகன் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.