சென்னை உலா x
தமிழ்நாடு

சென்னை உலா | ரூ.50 போதும் 17 பாரம்பரிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.. புதிய பேருந்து சேவை தொடக்கம்!

சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காண, 'சென்னை உலா' என்ற புதிய பேருந்து சேவையை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

PT WEB

சென்னை உலா பேருந்து சேவையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். 50 ரூபாய் டிக்கெட்டில் 17 முக்கிய இடங்களை சுற்றி பார்க்கலாம். வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பேருந்து, மெரினா, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களை இணைக்கிறது. வார இறுதியில் காலை 10 முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக 'சென்னை உலா" பேருந்தினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முந்தைய வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து, மெரினா, மயிலாப்பூர், எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட 17 முக்கிய இடங்களை இணைக்கிறது. வெறும் 50 ரூபாய் டிக்கெட் எடுத்தால், நாள் முழுவதும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் ஏறி இறங்கிச் சுற்றிப் பார்க்கலாம்.

சென்னை உலா திட்டம் தொடக்க விழா

சென்னை உலா பேருந்துகள் வாரம் முழுவதும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரைக்கும், வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் இயக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் அந்தப் பேருந்தில் ஏறி தலைமைச் செயலகம் வரை பயணம் செய்தார். பேருந்தில் சென்னை மாநகரின் புராதான சின்னங்கள் மற்றும் முக்கிய இடங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நிறுத்தங்கள் வருவதற்கு முன்பாக அந்த வரலாறுகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது.