தமிழ்நாடு

சென்னை: அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

kaleelrahman

சாலையின் தடுப்புச் சுவரில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

சென்னை வில்லிவாக்கம் தாதான்குப்பம் ரயில்வே மேம்பாலம் 200 அடி சாலையில், சாலையின் தடுப்பு சுவருக்கு கருப்பு வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணி நேற்றிரவு நடந்தது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்து 8 பேர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அதிவேகமாக வந்த கார், சரக்கு ஆட்டோ மீது மோதியது. அப்போது வேலை செய்து கொண்டிருந்த 8 பேர் மீது சரக்கு ஆட்டோ மோதியது. இதில், 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலா, செஞ்சியைச் சேர்ந்த காமாட்சி ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

தனது நண்பர்கள் 4 பேருடன் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெரம்பூரைச் சேர்ந்த சுஜீத் (19) என்பவரை திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தில். சுஜீத்திற்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.