செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் கெல்வின் கென்னி ஜெயன் (21), இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது தனது நண்பரான அண்ணா பல்கலை முதலாம் ஆண்டு மாணவன் சித்தார்த் (20), ஆகியோர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ரயிலில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கிரிக்கெட் போட்டி முடிந்ததும், நள்ளிரவில் மீண்டும் மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் வந்த இருவரும் மீனம்பாக்கத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பைக்கில் ராமாபுரம் நோக்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்கானா திருப்பத்தில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நேராக மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கெல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த நிலையில் சித்தார்த் எழுந்து நின்று அருகில் இறந்து கிடந்த கெல்வினை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது நண்பன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்ததை பார்த்த சித்தார்த் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்துள்ளார் இதையடுத்து அங்கு வந்த மருத்துவர் அவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சித்தார்த்தும் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.