சென்னையில் மின்சார ரயில் பெட்டிகளின் இணைப்பு திடீரென இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதட்டம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஏராளமான பயணிகள் இதில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செல்கல்பட்டுக்கு வழக்கம்போல் மின்சார ரயில் ஒன்று இன்று இயக்கப்பட்டிருக்கிறது. இந்த மின்சார ரயில் ஊரப்பாக்கம்- கூடுவாஞ்சேரி இடையே வந்தபோது திடீரென மின்சார ரயில் பெட்டிகளின் இணைப்பு சங்கலிகள் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏதோ ரயிலில் விபத்து ஏற்பட்டதை உணர்ந்த ரயில் பயணிகள் கலக்கமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ரயில் விபத்து ஏற்பட்டதையடுத்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இணைப்பு துண்டான இரண்டு பெட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறினார். துண்டான இரண்டு பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அந்த ரயிலின் சேவை தொடங்கியது. விபத்திற்குள்ளான ரயில், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தகவல்கள்: செய்தியாளர் சாந்தகுமார்.