ஸ்பைஸ் ஜெட் pt web
தமிழ்நாடு

சென்னை டூ தூத்துக்குடி | இன்று முதல் மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

சென்னை டூ தூத்துக்குடி, தூத்துக்குடி டூ பெங்களூரு விமான சேவையை இன்று முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராஜன்

தமிழ்நாட்டில் 2வது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறி வருகிறது. இங்கு 250 பேர் பயணிக்கும் ஏ321 ரக ஏர் பஸ் விமானம் வந்து செல்லும் வசதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பஸ், ரயில், கப்பல், விமானம் என 4 வகையான போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக தூத்துக்குடி உள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் நான்கு முறையும், பெங்களுாருவுக்கு ஒரு முறையும் தனியார் நிறுவனமான, இண்டிகோ' விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான போக்குவரத்து சேவையை, 2020ல் அந்நிறுவனம் நிறுத்தியது. இதையடுத்து தற்போது, பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இன்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு முறையும், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு முறையும், விமானத்தை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து விமானத்தை வரவேற்றனர். பல வருடங்களுக்குப் பின் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிகழ்வு மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.