போதைப்பொருள் கடத்தலில் கைதானவர்
போதைப்பொருள் கடத்தலில் கைதானவர் pt desk
தமிழ்நாடு

சென்னை டூ மதுரை: பொதிகை ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.90 கோடி மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

webteam

செய்தியாளர்: பிரசன்னா

நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ளமன் பிரகாஷ் என்பவரை பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன்

சென்னையில இருந்து - செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில், இரண்டு பேக்குகுடன் சென்னையை சேர்ந்த பிள்ளமன் பிரகாஷ் ஏறியுள்ளார். அதிகாரிகளும் ரயிலில் பின் தொடர்ந்தனர். இதையடுத்து பிளளமன் பிரகாஷ், மதுரை ரயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது, அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து அவரது இரண்டு பேக்குகளையும் சோதனை செய்தனர். அப்போது அதில் 10 பொட்டலங்களில் 15 கிலோ எடையுள்ள போதைப் பொருள், 15 கிலோ திரவ வடிவிலான பொருள் மற்றும் 30 கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவரை மதுரை ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட போதைப் பொருளின் மதிப்பு 90 கோடி ரூபாய் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை கேகே நகர் பகுதியைச் சார்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Police

இதைத் தொடர்ந்து தமிமுன் அன்சாரியின் வீட்டிலிருந்து பவுடர் வடிவிலான சுமார் 10 கிலோ மதிப்பிலான யூரியா, அசிட்டோன், சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் மெத்தாபெட்டமைன் ஆகியவை அடங்கிய பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தமிமுன் அன்சாரிக்கு சென்னையைச் சேர்ந்த அன்பு மற்றும் அருண் என்பவர்கள் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் மதுரை வந்த அன்பு, ‘கெமிக்கல்’ என்றுக்கூறி போதைப்பொருளை வைத்துவிட்டு சென்றதாக தமிமுன் அன்சாரி போலீசாரிடம் கூறிய நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அன்பு, அருண் ஆகிய இருவரும் நைஜீரியா நபர்களிடம் போதைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களை வாங்கி தமிமுன் அன்சாரி வீட்டில் பதுக்கி வைத்து வந்துள்ளனர். தேவைக்கேற்ப மதுரை வந்து தேவையான அளவு தயாரித்து எடுத்துச் சென்றுள்ளதும், ஒரு கிராம் ரூ.5 ஆயிரம் வரை விற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பமாக புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள நைஜீரியர்களிடமும் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

police

இந்த நிலையில்தான் மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பின்தொடர்ந்து வந்து பறிமுதல் செய்து பிரகாஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்களிடம் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை ஒரே இடத்தில் வைக்காமல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரித்து பதுக்கி வைக்கப்பட்டு வருவது தற்பொழுது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடல் வழியாக எளிதாக இலங்கைக்கு போதைப் பொருள்களை எளிதில் கடத்திச் செல்ல முடியும் என்பதால் தமிழகத்தை சர்வதேச போதை கும்பல் குடோனாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.