தமிழ்நாடு

சென்னை: காரில் இருந்து கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்: காரை தடுத்து காப்பாற்றிய காவலர்

சென்னை: காரில் இருந்து கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்: காரை தடுத்து காப்பாற்றிய காவலர்

kaleelrahman

சென்னையில் காரில் சென்ற இளம் பெண் கூச்சலிட்டதால் காரை மடக்கிப் பிடித்த போலீசார் அதில் இருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாகச் சென்ற காரில் இருந்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இலங்கை தூதரக பாதுகாப்பு பணியில் இருந்த, காவலர் தேவசகாயம் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார். காரை சோதனை செய்தார். அப்போது, காரில் இருந்த இளம் பெண் கூச்சலிட்டவாறு செருப்பால் உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக அடித்துள்ளார்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்த பெண் மென் பொறியாளர் என்பதும், போரூரில் தங்கி பணி புரிந்து வரும் இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்றிரவு நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தெரியவந்தது.

அப்போது விடுதியில் அறிமுகமான 3 பேர் இன்று அதிகாலை இளம் பெண் தங்கியிருக்கும் அறையில் கொண்டு விடுவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த இளம் பெண்ணிடம் 3 இளைஞர்களும் பாலியல் சீண்டலில் ஈடுபட அவர் கூச்சலிட்டது தெரியவந்தது.

இந்நிலையில், நான்கு பேரும் அதிகளவு மது போதையில் இருந்ததால் அவர்களின் பெற்றோரை அழைத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் கூறி இருப்பதால் அது உண்மையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.