தமிழ்நாடு

சென்னை: யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

kaleelrahman

தலைமறைவாக உள்ள யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டின் நுணுக்கங்களை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலை செய்து பிரபலமானவர் யூ-டியூபர் மதன். பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடுவதுதான் இவர் யூ-டியூப் சேனலின் ஸ்பெஷாலிட்டி. இவர் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளில் பெண்கள் குறித்து பேசுவதை எதிர்த்து கேட்போரையும் அதே பாணியில் வசைபாடி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக புளியந்தோப்பு சைபர் பிரிவில் மதன் மீது 2 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில் மதனை விசாரணைக்கு ஆஜராக அழைத்தும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் யூ-டியூபர் மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்மில் கூடுதலாக ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மதனை தேடும் பணியில் புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீசார் மட்டுமல்லாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கியுள்ளனர். புகார் குறித்த உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி யூ-டியூபர் மதனை பிடித்தாலே தெரியவரும் என்பதால் முதற்கட்டமாக மதனை பிடிக்கும் முயற்சியில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் முனைப்பு காட்டி தீவிர விசாரணையை துவங்கியுள்ளனர்.

இதையடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.