செய்தியாளர்: ஆனந்தன்
சென்னையில் வீட்டில் வளர்க்கும் நாய் முதல் தெரு நாய்கள் வரை தெருவில் நடந்து செல்பவர்களைக் கடிக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை செனாய் நகர் அருணாச்சலம் தெரு சாலையில் நடந்து செல்லும் நபர்களை தெரு நாய்கள் கடித்து வருவதாகவும், இதுவரை எட்டு பேரை தெரு நாய் கடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பின் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்துச் சென்றனர். வெளியில் இருந்து யாரோ இந்த நாயை இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும், அந்த நாய் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்ததாக பொதுமக்கள் குற்றசாட்டினர்.
இதையடுத்து நாய் தொல்லை அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தெரு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.