சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பற்றிய தீ 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிகிறது.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் காலை சுமார் 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கு ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என தெரிய வந்துள்ளது. மின்கசிவோடு அருகில் இருந்த டீசல் கேன் வெடித்ததால் தீ வேகமாக பரவியதும் தெரிய வந்திருக்கிறது. கடைக்குள் சிக்கியிருந்த 14 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இதனிடையே, தீ விபத்து ஏற்பட்டுள்ள "சென்னை சில்க்ஸ்" அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைக்கும் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். புகைமூட்டம் அதிகம் இருப்பதால் தீயை அணைக்கும் பணி தாமதமாவதாகக் கூறிய அமைச்சர் உதயகுமார், தீயை அணைக்க 50 லாரிகளில் தண்ணீர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருவதால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கட்டடத்துக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், தீயணைக்கும் பணிகளை வேடிக்கை பார்க்க அதிகளவில் மக்கள் கூடி வருகின்றனர். கட்டடத்துக்குள் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்க வசதியாக கடையின் இரண்டாவது தளத்தில் துளையிட்டு தீயணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.