சென்னை பெருங்குடியில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட சந்தியாவின் தலையை மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தேடினர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற தேடலில் சந்தியாவின் தலை சிக்கவில்லை.
கடந்த மாதம் 21ஆம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்கில் இருந்து பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டன. நீண்ட தேடலுக்குப்பின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். சந்தியாவை கொடூரமாக கொலை செய்ததாக அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சந்தியாவின் தலை உள்ளிட்ட எஞ்சிய உடல் பாகங்களை காவல்துறையினர் தேடி வந்தனர். அடையாறு கூவம் ஆற்றில் இருந்து சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. எனினும் தலை கிடைக்கவில்லை. பெருங்குடி குப்பைக் கிடங்கில் சந்தியாவின் தலை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிப்படைக் காவலர்கள் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளான இன்று மோப்ப நாய் டெய்சன் உதவியுடன் சந்தியாவின் தலையை காவல்துறையினர் தேடினர். குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் வீசியதால் டெய்சனால் நீண்ட நேரம் மோப்பம் பிடிக்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேர டெய்சன் நடத்திய தேடலில் சந்தியாவின் தலை சிக்கவில்லை.