செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை வேளச்சேரி, பவானி தெரு, கருமாரியம்மன் நகர் விரிவைச் சேர்ந்தவர்கள் கவிதா - மணிகண்டன் தம்பதியர். இவர்கள் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு ஜாதகம் பார்ப்பதற்காக வல்லாஞ்சேரியில் ஜோதிடர் வெங்கடசுரேஷ் என்பவரை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது ஜோதிடர், உங்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கு, நீங்கள் இருவரும் சேர்ந்து தொழில் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதையடுத்து ஜோதிடர், தனது நண்பர் ஒருவருக்கு 2020ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கு உரிமம் வாங்கிக் கொடுத்ததாகவும், நீங்களும் பெட்ரோல் பங்க் ஆரம்பித்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஜோதிடர் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரையும் திருமுடிவாக்கத்தில் உள்ள விஜய்பாஸ்கர் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று 85 லட்சம் கொடுத்தால் உங்களுக்கு பெட்ரோல் பங்க் வைக்க உடனடியாக லைசென்ஸ் வாங்கி தருவார் என கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும் 50 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், பணம் கொடுத்து வருடக்கணக்கில் ஆகியும் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜோதிடர் வெங்கடசுரேஷ் மற்றும் விஜய்பாஸ்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்த நிலையில் ஜோதிடர் வெங்கடசுரஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜய்பாஸ்கரை போலீசார் தேடி வருகின்றனர்.