சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், கடந்த 2015 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளருமான தென்னரசுவின் சகோதரருமான பாம் சரவணன் என்ற ரவுடியை கடந்த 15 ம் தேதி துப்பாக்கியால் காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர், குண்டு காயத்துடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம் சரவணன் மீது 6 கொலை வழக்குகள், 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உட்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 7 ஆண்டுகளாக மூடிக் கிடந்த வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ரவுடி ஒருவர் காணமல் போன வழக்கில், அவரை பாம் சரவணன் தான் காரில் கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்திருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டு காணாமல் போன ரவுடி பன்னீர்செல்வம் என்ற யானை செல்வத்தை கடத்திச் சென்று எரித்துக் கொன்றதாகவும் ஆந்திரா கூடூர் பகுதியில் வைத்து எரித்து கொன்றதாகவும் அதிர்ச்சி வாக்குமூலத்தை ரவுடி பாம் சரவணன் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பன்னீர் செல்வம் என்ற யானை செல்வத்தின் மீது பல்வேறு வழக்குகள் இருந்ததுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுதபூஜை அன்று ரவுடி பன்னீர் செல்வம் காணாமல் போனார். இது குறித்து அவரது தாயார் மங்கை சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து சிஎம்பிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர் செல்வத்தை தேடிவந்தனர்.
ஆனாலும், அந்த வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவரது தாயார் மங்கை அப்போதே ரவுடி பாம் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்குள் ரவுடி பாம் சரவணன் தலைமறைவாகி விட்டதால் வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே, தனது மகனை கண்டுபிடித்து தர போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் பன்னீர் செல்வத்தின் தாயார் மங்கை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 15 ம் தேதி கைது செய்யப்பட்ட பாம் சரவணன் வாயிலாக தனது மகன் பன்னீர் செல்வம் எரித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை தெரிய வந்ததும் தாய் மங்கை கதறித் துடித்தார். தனது மகனை கொன்ற ரவுடி பாம் சரவணனை என்கவுண்டர் செய்யுங்கள் என்று கைக்கூப்பி கதறியுள்ளார் மங்கை.
"கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது மகனை தேடி வந்தேன். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பயனுமில்லை. கூட்டாளிகளே எனது மகனை பாம் சரவணனிடம் கடத்திச் சென்று கொடுத்து விட்டனர். எத்தனை பேரைதான் பாம் சரவணன் கொலை செய்வார். பாம் சரவணனை என்கவுண்டர் செய்ய வேண்டும். கொன்று விட்டாவது எனது மகனின் உடலை கொடுத்திருக்கலாம். வருவான் வருவான் எனக் காத்திருந்தேன்.
காவல்துறையினர் கால்களில் விழுந்து கதறினேன். பாம் சரவணன் கடத்திச் சென்றுவிட்டாதாக 2018ல் போலீசாரிடம் தெரிவித்திருந்தேன். சாப்பிட வருவதாக போன் செய்தவனுக்காக கறிசோறு சமைத்து காத்திருந்தேன். பாம் சரவணன் காலில் சுட்டதை விட நெஞ்சில் சுட்டிருக்க வேண்டும்" என்று கதறி அழுதார் மங்கை.
2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் தென்னு என்ற தென்னரசு கொலைக்கு பழிக்குப் பழியாக ரவுடி பன்னீர் செல்வத்தை தென்னரசுவின் சகோதரரான பாம் சரவணன் எரித்துக் கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன் ரவுடி கடத்தப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட வழக்கில் சற்றும் எதிர்பாராத திருப்பமாக கடத்தப்பட்ட சில தினங்களிலேயே ரவுடி எரித்துக் கொலை செய்த சம்பவமம் தற்போது வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏறடுத்தியுள்ளது.